கோவையில் குடியரசு தினவிழா: பொதுமக்களுக்கு அனுமதி
ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகள் தீவிர சோதனை செய்யப்படுகிறது
நாட்டின் 74-வது குடியரசு தினவிழா வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
கோவையில் வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் காலை 8.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தேசிய கொடியை ஏற்றுகிறார். பின்னர் அவர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
இதனை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கத்தை அணிவிக்கிறார். மேலும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவிக்கிறார். மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்துகிறார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு பொதுமக்கள் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.
குடியரசு தின விழாவை நடைபெறும் வ.உ.சி. மைதானம் நாளை மறுதினம் முதல் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட உள்ளது. அங்கு 24 மணி நேரமும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொள்வார்கள்.
மேலும் குடியரசு தின நாளன்று அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கூடுதலாக 1,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள்.
கோவை ரயில் நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை தீவிர சோதனை செய்த பின்னரே ரயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.
இதேபோல கோவை விமான நிலையத்தில் மூன்றுஅடுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu