இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம்..!

இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம்..!
X

பல்வேறு அமைப்பினர் போராட்டம்

ஊர்வலமாக சென்று முற்றுகையிட முயன்ற 100க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அண்மையில் தமிழக மீனவர்கள் சென்ற படகு மீது இலங்கை கடற்படையினர் படகை வைத்து மோதியதில் தமிழ்நாடு மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரியும் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கோவையில் உள்ள இலங்கையை சார்ந்த டாம்ரோ நிறுவனத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று காலை அனைத்து கட்சியினர் சார்பில் காந்திபுரம் அருகே கோவை - சத்தியமங்கலம் சாலையில் உள்ள டாம்ரோ நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர். இந்தப் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகலை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று முற்றுகையிட முயன்ற 100க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறுகையில், ”கடந்த 40 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், சுட்டுக் கொல்வதும் தொடர்ந்து வருகிறது. அண்மையில் தமிழக மீனவர்கள் இருவரை கொலை செய்த இலங்கை கடற் படையினர், தமிழக மீனவர்களின் படகுகளையும் சேதப்படுத்தினர்.

இந்த சம்பவம் தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களை கொலை செய்த இலங்கை கடற்படையினர் மீது தமிழக அரசும், மத்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. குஜராத் மீனவர்கள் தாக்கப்பட்டால் உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசு. தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிப்பதில்லை. இது கண்டனத்திற்குரியது. உடனடியாக தமிழக மீனவர் தாக்கப்படும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil