கோவை கோனியம்மன் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துச் சென்ற போலீசார்

கோவை கோனியம்மன் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துச் சென்ற போலீசார்

கோவை கோனியம்மன் கோவிலுக்கு சீர்வரிசை கொண்டு சென்ற போலீசார்

கோவை கடை வீதி காவல் நிலையம் சார்பில் கோனியம்மன் கோவிலுக்கு சீர் வரிசைகள் எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு வழங்கப்பட்டது.

கோவை டவுன்ஹால் பகுதியில் கோனியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோனியம்மன் கோவையின் காவல் தெய்வமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று பிற்பகலில் நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 4 மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது.

இந்த தேர் திருவிழாவை காண கோவை மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வர். பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் அன்னதானம், நீர்மோர் குளிர்பானங்கள் ஆகியவற்றையும் வழங்குவர். தேர்நிலைத் திடல் பகுதியில் துவங்கும் இந்த தேரோட்டம் ஒப்பணக்கார வீதி வழியாக பிரகாரம் வந்தடைந்து மீண்டும் தேர் நிலை சென்றடையும்.

இந்நிலையில் வருடம் தோறும் கடை வீதி காவல் நிலையம் சார்பில் சீர் வரிசைகள் எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு வழங்கப்படும். அதன்படி இந்த வருடம் கடை வீதி காவல் நிலைய ஆய்வாளர் சசிகலா கோனியம்மனுக்கு சீர் வரிசைகளை எடுத்துச் சென்றார். முன்னதாக கோவில் நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வாளருக்கு பரிவட்டம் கட்டினர். அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கடை வீதி காவல் துறையினர் பழங்கள், புடவைகள், பூமாலைகள் அடங்கிய சீர்வரிசைகளை எடுத்துச் சென்றனர்.

Tags

Next Story