விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்களை பதிக்க எதிர்ப்பு ; விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் மனு

விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்களை பதிக்க எதிர்ப்பு ; விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் மனு
X
இருகூரிலிருந்து பெங்களூர் வரை எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெங்களூர் வரை எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில் முத்தூர் வரை விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதிப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்தும், கோவை இருகூர் முதல் முத்தூர் வரை எண்ணெய் குழாய்களை சாலையோரம் அமைத்திட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஈசன் முருகசாமி, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஏற்கனவே கோவை மாவட்டம், இருகூர் முதல் கரூர் வரை விவசாய விளைநிலங்கள் வழியாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் குழாய் அமைத்துள்ளது. இதனால் திட்டப் பகுதியில் எவ்வித விவசாயமும் செய்ய முடியாமல், வருவாய் ஈட்ட முடியாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள விவசாய நிலங்கள் கோடிக்கணக்கில் விற்கும் போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அரசு வங்கிகள் முதல் உள்ளூர் கந்து வட்டிக்காரர் வரை யாரும் எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்ட நிலத்திற்கு கடன் கொடுப்பதில்லை. இந்த நிலையில் மீண்டும் மீண்டும் ஒரு எண்ணெய் குழாய் அமைப்பதற்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறது.

தற்போது இரண்டாவது திட்டம் கோவை மாவட்டம், இருகூரிலிருந்து பெங்களூரு வரை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் முத்தூரிலிருந்து, பெங்களூர் வரை 270 கிலோ மீட்டர் தூரம் திட்டம் சாலை ஓரமாகவே அமைக்கப்பட உள்ளது. ஆனால் முத்தூர் வரை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழாயின் அருகிலேயே மீண்டும் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை 360 கிலோமீட்டர் தூரமும், இந்தியன் ஆயில் எண்ணெய் குழாய் திட்டம் 152 கிலோமீட்டர் தூரத்திற்கும், இதே திட்டம் முத்தூர் முதல் பெங்களூர் வரையிலும் சாலை ஓரமாக அமைக்க வேண்டும் என கொள்கை முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் இந்நிறுவனம் மீண்டும் விவசாய நிலத்திற்குள் வருவது விவசாயிகளை கடுமையாக பாதிக்கிறது. ஏற்கனவே இருகூர்- முதல் கரூர் வரை அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாயை தோண்டி எடுத்து சாலை ஓரமாக அமைக்கவும், புதிதாக திட்டமிட்டுள்ள இரண்டாவது எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்