தமிழகத்தில் வாக்கு கேட்கிற தார்மீக உரிமை மோடிக்கு இல்லை : முத்தரசன் விமர்சனம்

தமிழகத்தில் வாக்கு கேட்கிற தார்மீக உரிமை மோடிக்கு இல்லை : முத்தரசன் விமர்சனம்
X

முத்தரசன்

தேர்தலை இந்தியா கூட்டணி கொள்கை ரீதியாக எதிர்கொள்ளும். பாஜக உடைய அராஜகங்களுக்கு இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்.

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவும், ஜனநாயகம் காப்பாற்றப்படவும், அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்படும் வாய்ப்புகள் ஏற்படும். அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் பாதுகாக்கப்படவும் இன்றைக்கு இருக்கக்கூடிய மோடி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும். இல்லையென்றால் நாடு பேராபத்தை சந்திக்கும். இந்தியா கூட்டணி ஏற்பட தமிழ்நாடு தான் முக்கிய காரணம். குறிப்பாக மு.க.ஸ்டாலின் அவர்கள். திமுக கூட்டணியில் அங்கம் பெற்று இருக்கிற கட்சிகள் உடனான தொகுதி பங்கோடு நேற்றுடன் முடிவடைந்து இருக்கிறது. இந்திய அளவிலும் நல்ல கூட்டணி உருவாகி இருக்கிறது. இந்த தேர்தலை இந்தியா கூட்டணி கொள்கை ரீதியாக எதிர்கொள்ளும்.பாரதிய ஜனதா கட்சியின் உடைய அராஜகங்களுக்கு இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்.

தேர்தல் ஆணையத்தில் பதவி வகித்த அருண் கோயில் திடீரென்று ராஜினாமா செய்திருக்கிறார். அவர் ஏன் ராஜினாமா செய்தார்? ராஜினாமா ஏன் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறித்து இவரை தெரிவிக்கப்படவில்லை. மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒருவர் ராஜினாமா செய்து விட்டார். தற்போது அருண் கோயிலும் ராஜினாமா செய்திருக்கிறார். தற்போது தலைவர் மட்டுமே மீதம் இருக்கிறார். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் ஒரு ஜனநாயக முறையில் நடைபெறுமா என்கின்ற ஒரு மிகப்பெரிய ஐயம் ஏற்பட்டுள்ளது. ராஜினாமா செய்த அருண் கோயில் ஏன் ராஜினாமா செய்தார் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் அல்லது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட அரசாங்கம் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும்.

பிரதமர் ஊழலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்று சொல்லுகிறார். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆனால் தேர்தல் பத்திரம் மூலம் மிகப் பெரிய அளவில் ஆதாயம் பெற்ற கட்சி பாரதிய ஜனதா கட்சி. தேர்தல் பத்திர விபரங்களை வெளியிட ஸ்டேட் பாங்க் கால அவகாசம் பெற்றுள்ளது. பாஜக பெற்ற நிதியின் மூலம் அந்த ஊழல் அம்பலமாகிவிடும் என்பதால், ஸ்டேட் வங்கியை அவகாசம் கேட்க வலியுறுத்தி இருக்கிறார்கள். இத்தகைய ஊழலில் ஈடுபட்டிருக்கக் கூடிய நரேந்திர மோடி ஊழல் பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர். மோடிக்கு ஊழல் பற்றி பேச தகுதி இல்லை. இந்தியாவில் இருக்கிற 140 கோடி மக்களும் என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று மோடி பேசுகிறார். குடும்பத்தை பற்றி எல்லாம் பேசுவதற்கு மோடிக்கு அருகதை இல்லை.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட ஒன்றிய அரசு தரவில்லை. ஆனால் மோடி சென்னையில் பேசுகிற போது எங்களுடைய அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகிறது என்று அப்பட்டமாக பொய் பேசுகிறார். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை. பேரிடர் நிவாரண நிதி என்று ஒன்றிய அரசால் தனியாக ஒரு நிதி பராமரிக்கப்படுகிறது. இந்த குழுவிற்கு பிரதமர் தான் தலைவர். ஆனால் ஏன் தமிழகத்திற்கு பேரிடர் நிதி கொடுக்க மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்யாமல் அவர்கள் பாதிக்கப்பட்டு நிற்கதியாக நிற்கிற பொழுது கூட உதவி செய்யாத பிரதமருக்கு தமிழ்நாட்டில் ஓட்டு கேட்க என்ன உரிமை இருக்கிறது? தமிழ்நாட்டிற்கு வருவதற்கு மோடிக்கு தார்மீக ரீதியான உரிமை இல்லை" எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!