அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் பண மோசடி : போலீசார் வழக்கு பதிவு..!

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் பண மோசடி : போலீசார் வழக்கு பதிவு..!
X

பணமோசடி (கோப்பு படம்)

கோவையில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்தவர்கள் மீது இளைஞர் புகார் அளித்துள்ளார்.

எத்தனை விழிப்புணர்வு செய்திகள் வந்தாலும் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்றதும் எப்படி நம்பிக்கை வருகிறது என்று தெரியவில்லை. அதிலும் படித்த இளைஞர்களே ஏமாறுவது துரதிர்ஷடவசமானது.

இதோ இன்னொரு ஏமாந்த கதை. கோவையில் அரசு வேலை தருவதாக ரூ.4.55 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசில் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (25). இவர் மரக்கடை நடத்தி வந்தார். அரசுப்பணியில் சேரவேண்டும் என்பது இவரது இலக்கு. அதனால் அரசு வேலை தேடிவந்தார்.

இந்த நிலையில் தினேஷ்குமாருக்கு விஜயகுமார், வீரகுமார், டேவிட் மதி போன்ற சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. தினேஷ்குமாரின் அரசு வேலை ஆசையை அறிந்துகொண்ட 3 பேரும் அரசு அலுவலகங்களில் உதவியாளர் பணியிடம் வாங்கித் தருவதாக ஆசை காண்பித்தனர். குறிப்பாக தினேஷ்குமாரிடம் பத்திரப்பதிவுத் துறையில் உதவியாளர் பணியிடம் வாங்கி தருகிறோம் என்று கூறினர். இதற்காக வீரகுமார் கடந்த ஏப்ரல் மாதம் தினேஷ்குமாரை சென்னைக்கு வரவழைத்தார்.

அங்கு தினேஷ்குமாரின் கல்விச் சான்றிதழ்களை சரி பார்த்தனர். பின்னர் தினேஷ்குமாரிடம் இருந்து 2 லட்ச ரூபாய் பணமும் பெற்றுக்கொண்டனர். அதற்குப்பின்னரும் ஏதாவது காரணங்களை கூறி பல முறை ஆன்லைன் மூலமாக 2.55 லட்ச ரூபாய் பெற்றனர்.

பீளமேடு சார் பதிவாளர் அலுவலகத்தில் உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது என்று கூறி தினேஷ்குமாரை வரவழைத்து பணி நியமன கடிதம் ஒன்றை அவரிடம் கொடுத்தனர். தினேஷ்குமாரும் அரசு வேலை கிடைத்த மகிழ்ச்சியோடு பீளமேடு பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு சென்ற பின்னர்தான் அது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக தினேஷ்குமார் அவர்களிடம் விசாரித்தபோது 3 பேரும் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட விவரம் தெரியவந்தது. இது குறித்து தினேஷ்குமார் சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!