மீண்டும் மோடி தான் பிரதமர் என்பது உறுதி : வானதி சீனிவாசன் நம்பிக்கை

மீண்டும் மோடி தான் பிரதமர் என்பது உறுதி : வானதி சீனிவாசன் நம்பிக்கை
X

வானதி சீனிவாசன்

தேசிய ஜனநாயக கூட்டணிப் பெறப்போகும் வெற்றி 1967ல் ஏற்பட்டதைப் போல பெரும் அரசியல் மாற்றத்திற்கு வித்திடும் என்பதில் சந்தேகம் இல்லை என கூறினார்

பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “2024 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நடக்கவுள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கலும் தொடங்கிவிட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 19, பாட்டாளி மக்கள் கட்சி 10, தமிழ் மாநில காங்கிரஸ் 3, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 2, இந்திய ஜனநாயக கட்சி 1, புதிய நீதிக் கட்சி 1, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் 1, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு 1 என தொகுதிப் பங்கீடு வெற்றிகரமாக முடிந்துள்ளது.

தமிழகத்தை ஆளும் திமுக, இதற்கு முன்பு ஆண்ட அதிமுகவுக்கு மாற்றாக 9 கட்சிகளுடன் வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. பாஜக 19 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் (பெரம்பலூர்), புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் (வேலூர்), தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் (தென்காசி), இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தேவநாதன் யாதவ் (சிவகங்கை) ஆகிய நான்கு பேரும் பாஜகவின் வெற்றிச் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். 1996 மக்களவத் தேர்தலில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட பிறகு, அதிகபட்சமாக 23 தொகுதிகளில் தாமரை சின்னம் களத்தில் உள்ளது.

பாஜக சார்பில் போட்டியிடும் 19 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக கோட்டையான கோவையில் போட்டியிடுகிறார். நான் சட்டமன்ற உறுப்பினராக உள்ள கோவை தெற்கு தொகுதி கோவை மக்களவைத் தொகுதிக்குள்தான் வருகிறது. முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தென் சென்னையில் போட்டியிடுகிறார். பாஜக மாநிலப் பொதுச்செயலாளர்கள் இராம.சீனிவாசன் (மதுரை), கருப்பு முருகானந்தம் (தஞ்சாவூர்), பி. கார்த்தியாயினி (சிதம்பரம்), ஏ.பி.முருகானந்தம் (திருப்பூர்), பொன் வி. பாலகணபதி (திருவள்ளூர்) ஐந்து பேரும் தேர்தலில் களம் புகுந்துள்ளனர். பிரபல திரைப்பட நடிகர் ராதிகா சரத்குமார் விருதுநகரில் போட்டியிடுகிறார். மூத்த தலைவர் கே.பி.ராமலிங்கம் நாமக்கல்லில் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மனைவியும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான செளமியா அன்புமணி போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த 39 பேரும் நரேந்திர மோடி பிரதமராக கிடைக்கப்போகும் 400க்கும் அதிகமான எம்.பி.,க்களில் ஒருவராக இருக்கப் போகிறார்கள். மீண்டும் மோடி தான் பிரதமர் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகு நடக்கும் தேர்தல் இது. எனவே, தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கே வாக்களிப்பார்கள். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிப் பெறப்போகும் வெற்றி 1967ல் ஏற்பட்டதைப் போல பெரும் அரசியல் மாற்றத்திற்கு வித்திடும் என்பதில் சந்தேகம் இல்லை” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!