மின்சார துறை பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

மின்சார துறை பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
X

கோவையில் மின்சார துறை ஆய்வு கூட்டத்திற்கு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி. 

சென்னை, கோவை உட்பட அனைத்து இடங்களிலும் பருவமழையை எதிர்கொள்ள மின்சார துறை தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பருவ மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் வழிகாட்டுதல் கொடுத்து இருக்கின்றனர் எனவும்இரு தினங்களில் பெய்த மழை காரணமாக கோவையில் மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும், பெரிய அளவில் மழை பெய்தாலும் ஒரு சில மணி நேரங்களில் தண்ணீர் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். மழையை எதிர்கொள்ளும் வகையில் கடந்த மே மாதம் முதலே தேவையான பணிகளை செய்து வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

கோவையில் மழை பாதிப்புகள் குறித்த செய்திகளை வெளியிடுவதை போல,அரசு மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகள் குறித்தும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட வேண்டும் எனவும், ஒரு தரப்பு செய்தியை மட்டும் வெளியிடுவது போல தோற்றம் இருக்கின்றது என்பது என் கருத்து எனவும் தெரிவித்தார். மழை பாதிப்பு குறித்து வெளியிடப்படும் செய்திகளை கவனத்தில் எடுத்து கொள்கின்றோம், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை செய்தியாக்க வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள் எனவும் தெரிவித்தார். கோவையில் மழை நீர் தேங்கும் இடங்கள் என 6 இடங்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றது எனவும், அந்த இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என தெரிவித்தார்.

சுரங்கப்பாதைகளில் மழை நீர் பாதிப்பு இருக்கும் இடங்களில் எந்த வாகனம் செல்ல முடியும் என்பதை தெரிவிக்கும் விதமாக கலர் மார்க் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஏற்கனவே மின்சார துறை பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும்,சென்னை, கோவை உட்பட அனைத்து இடங்களிலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இருக்காது எனவும் தெரிவித்தார். உயிரிழப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

மின்வாரியம் சார்பில் மரக்கிளைகள் அகற்றுவது என 15 லட்சம் பணிகள் நடைபெற்றுள்ளது என தெரிவித்த அவர்,மின் கம்பிகள் அறுந்து உயிர் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படுத்தபடுகின்றது எனவும் தெரிவித்தார். மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் கடந்த காலங்களை விட தற்போது உயிர்சேதங்கள் குறைந்து இருக்கிறது எனவும், வரும் ஆண்டுகளில் இது போன்ற பாதிப்புகள் இருக்காது எனவும் தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் மின்வாரிய அதிகரிகள் மற்றும்உயர்அதிகாரிகள் கொண்ட வாட்ஸ் அப் குழுக்கள் ஏற்படுத்தபட்டு பாதிப்புகள் குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

துணை முதல்வர் , அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கின்றனர் எனவும், பணிகள் தொய்வின்றி நடக்க அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர் எனவும், செய்தி வெளியிட வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஆய்வுகூட்டங்கள் குறித்து சொல்லி இருக்கின்றார் எனவும் தெரிவித்தார். எந்த மாவட்டத்திலும் தொய்வில்லாமல் பணிகள் சென்றடைய அமைச்சர்கள் பணிபுரிந்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!