ரேசன் பொருட்கள் தட்டுப்பாடு 90 சதவீதம் சரி செய்யப்பட்டுள்ளது : அமைச்சர் முத்துசாமி தகவல்
Coimbatore News- அமைச்சர் முத்துசாமி
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி, ”கோவையில் 1542 ரேஷன் கடைகள் இருக்கின்றன. 11 லட்சத்து 42 ஆயிரம் குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 34 லட்சம் மக்கள் பயன் பெறுகின்றனர். இன்றைய தினம் 750 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 6000 பேருக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 750 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மனு அளித்த சிலருக்கு கிடைக்கப் பெறாத சூழல் இருக்கிறது.
அந்த மனுவில் ஏதேனும் குறைபாடோ, ஒரே குடும்பத்தில் இரண்டு அட்டைகள் கேட்கின்ற சூழல் ஏதேனும் இருக்கின்றது போன்ற காரணங்களுக்காக தற்போதைக்கு அது தவிர்க்கப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் மனு அளித்தால், அது குறித்து ஆய்வு மேற்கொண்டு நியாயமானதாக இருந்தால், அதனையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் கூறியதைப் போலவே இந்த துறையின் அமைச்சர் சக்கரபாணி வேகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மகளிர் உரிமைத் தொகையை பொருத்தவரை ஏறத்தாழ 1 கோடியே 17 லட்சம் பேருக்கு கொடுக்கப்பட்டது. பின்னர் கூடுதலாக 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்படுகிறது. மீண்டும் இது சம்பந்தமாக யாரேனும் மனு அளிக்க விரும்பினால், மனு அளிக்கலாம் என்று அரசு சார்பிலேயே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு அளிக்கும் மனுவில் எந்த ஒரு குறைபாடும் தவறும் இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும். அவர்களும் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சில தட்டுப்பாடுகள் இருக்கிறது. தற்போது அவை ஏறத்தாழ 90 சதவிகிதம் சரி செய்யப்பட்டு இருக்கிறது. மீதமுள்ளவற்றையும் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சித் தலைவர் அதனை கண்காணித்து வருகிறார். இதில் ஏற்படுகின்ற குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவாகாதவர்கள் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, ”கண் விழி பதிவு கருவி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. கைரேகை பதிவாகாத பட்சத்தில் கண் கருவிழி மூலம் பதிவு செய்யப்பட்டு ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. சாலை பணிகள் பாதாள சாக்கடை பணிகளை பொருத்தவரை சாரதா மில் சாலை, பாலக்காடு சாலை பழுதடைந்து இருக்கிறது. பாதாள சாக்கடை பணிகள் முடிந்தாலும், ஒரு சில பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாள் இரவும் நான்கு- ஐந்து மணி நேரம் வரை தான் பணி செய்ய முடிகிறது. இதன் காரணமாகவும், மழையின் காரணமாகவும் தாமதம் ஏற்பட்டது. 15 நாட்களுக்குள் கோவை மாநகரில் பணிகள் முடிந்த முக்கிய சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu