கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த தென்னை மரம்
தீப்பற்றி எரிந்த தென்னை மரம்
கோடை காலம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.
குறிப்பாக கடந்த இரு வாரங்களுக்கு மேலாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. கோவையிலும் வாட்டி வதைத்து வரும் வெயிலால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் மழை பெய்ய வேண்டி மக்கள் பல்வேறு சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. காந்திபுரம், உக்கடம், பந்தய சாலை, டவுன்ஹால், ராமநாதபுரம், புலியகுளம், செல்வபுரம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. குறிப்பாக செல்வபுரம் பகுதியில் இடி விழுந்ததில் ஒரு தென்னை மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவையில் மழை பெய்து இருப்பது கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மழை பெய்ய வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu