கோவையில் கள்ள நோட்டு, துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவர் கைது

கைது செய்யப்பட்ட எர்வின் எவின்ஸ்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஹரேந்திரன் என்ற எர்வின் எவின்ஸ் (வயது49). இவர் ஓமியோபதி டாக்டர் எனக் கூறி கோவை வெள்ளலூர் ராமசாமி கோனார் நகரில் உள்ள தங்கராஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தலையோல பறம்பு போலீசார் கொள்ளை வழக்கு தொடர்பாக எர்வினை கைது செய்து அழைத்து சென்றனர். இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் தங்கராஜ், கைதான எர்வின் எவின்ஸ் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக போத்தனூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். சோதனையின் போது வீட்டில் போலி தங்க கட்டிகள், மற்றும் ஒரு புறம் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள், மற்றும் 3 ரப்பர் ஸ்டாம்பு, ஒரு துப்பாக்கி (ஏர்கன்) ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு எர்வின் எவின்ஸ் வாடகைக்கு குடியிருக்க வந்தார். அவரிடம் உங்களது மனைவி, குழந்தைகள் எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்னர் வருவார்கள் என்று கூறினார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை காணவில்லை என என்னிடம் கேட்டார். அதற்கு நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டியது தானே என்றேன். அதற்கு அவர் வேண்டாம் என கூறிவிட்டார். மேலும் வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன். இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து போத்தனூர் போலீசார் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட போலி தங்க கட்டிகள் துப்பாக்கி ஒரு பக்கம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எர்வினுக்கு எப்படி வந்தது? என விசாரித்து வருகிறார்கள். எர்வின் போலி டாக்டராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எனவே கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ள அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu