மதுக்கரை நகராட்சி தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்

மதுக்கரை நகராட்சி தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்
X
மதுக்கரை நகராட்சி தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கோவை மதுக்கரை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக தொடருகிறது.

இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், நகராட்சி சார்பில் வேலை பார்த்து வந்த எங்களை திருப்பூர் தனியார் நிறுவனத்தின்கீழ் ஒப்பந்த தொழிலாளியாக ஒப்படைத்து விட்டனர். இந்த நிலையில் மதுக்கரை நகராட்சி நிர்வாகம் எங்களிடம் ஒரு பத்திரதாளில் கையெழுத்து கேட்டு வற்புறுத்தி வருகிறது. அந்தப் பத்திரத்தில் பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து சங்கம் அமைக்க கூடாது. முன்னறிவிப்பு இன்றி விடுமுறை எடுக்கக் கூடாது. இ. எஸ்.ஐ, பி.எப் காப்பீடு வழங்கப்படாது, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது.

வேலை பார்க்கும்போது கையாளும் உபகரணங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அதற்கு நாங்களே பொறுப்பு, பணியின் போது வாடிக்கை யாளர்கள் புகார் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்பவை உள்பட 22 நிபந்தனைகள் இடம்பெற்று உள்ளன. எனவே நாங்கள் அந்த பத்திரத்தில் கையெழுத்து போட மறுத்து வருகிறோம். இதுகுறித்து மதுக்கரை நகராட்சி நிர்வாகம், மற்றும் தலைவர் ஆகியோர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தூய்மை பணியாளர்களின் போராட்டம் நீடித்தால் மதுக்கரை நகரில் சாக்கடை மற்றும் குப்பை அள்ளாமல் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தீவிர கவனம் செலுத்தி போராட்டத்தை நீடிக்க விடாமல் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
why is ai important to the future