ராமர் கோவில் கும்பாபிஷேகம் : ராமர் வேடத்துடன் தீப விளக்கு ஏந்தி பெண்கள் ஊர்வலம்..!

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : ராமர் வேடத்துடன் தீப விளக்கு ஏந்தி பெண்கள் ஊர்வலம்..!
X

தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு

பெண்கள் வீடுகளில் தீப விளக்கு ஏற்றி வைத்து பின்னர் விளக்குகளுடன் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.

நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை எதிர்பார்த்த நிலையில் இன்று பிரதமர் தலைமையில் வெகு விமர்சையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடைபெற்றது. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு, வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதன்படி கோவையில் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனர். கோவையில் பெண்கள் வீடுகளில் தீப விளக்கு ஏற்றி வைத்து பின்னர் விளக்குகளுடன் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கதிர் நாயக்கன்பாளையம் அண்ணா நகர் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் ராமரை வரவேற்கும் விதமாக வண்ண கோலமிட்டு தீப விளக்கு ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து ராமர் வேடமிட்ட குழந்தைகளுடன், பெண்கள் கையில் தீப விளக்குகளை ஏந்தியபடி ஊர்வலமாக அப்பகுதியில் உள்ள ராமர் கோவில் வரை சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதேபோல நஞ்சுண்டாபுரம் பகுதியில் ராமர் போட்டோ வைத்து சிறிய தேரில் பஜனைகள் பாடியபடி பாஜகவினர் ஊர்வலமாக செல்லும் போது போத்தனூர் காவல் துறையினர் பாதி வழியில் தடுத்து நிறுத்தினர். அனுமதியின்றி ஊர்வலம் செல்லக்கூடாது எனக்கூறியதால், இருட்டில் உட்கார்ந்து பஜனை கோஷ்டிகள் பஜனை கீர்த்தனை பாடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Tags

Next Story
ai marketing future