கொடநாடு வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியிடம் மீண்டும் விசாரணை
விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வெளியே வந்தார் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரை 250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பாக பிரபல மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று பாண்டிச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடையே கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆறுகுட்டியிடம் கடந்த மாதம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட சூழலில் இன்று மீண்டும் அவரிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.கடந்த மாதம் நடத்தப்பட்ட விசாரணையின் போது சில விவரங்கள் கேட்காமல் விட்டதாகவும் அது தொடர்பான கேள்விகள் இன்றைய தினம் கேட்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே ஆறுகுட்டியிடம் மறு விசாரணை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இரண்டு முறை விசாரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆறுகுட்டியிடம் நடத்தப்படும் இந்த விசாரணை வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
சுமார் இரண்டு மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அதற்கு உரிய பதில் அளித்ததாகவும், எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைக்கலாம் என்றும் எப்போது அழைத்தாலும் தான் தயாராக இருப்பதாகவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்பதை தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றும் தற்போது அ.தி.மு.க.வில் நாடகம் நடக்கிறது என்றும் ஆறுகுட்டி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu