தமிழகத்தில் கள்ளுக்கடைகைள திறக்கவேண்டும்: பொள்ளாச்சி ஜெயராமன் வேண்டுகோள்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொள்ளாச்சி ஜெயராமன்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள மாவடப்பு பகுதியில் மது அருந்தியதில் இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோவையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் கள்ளசாராயம் அருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறும் நிலையில், காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள மகேந்திரன் என்பவரை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் மற்றும் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், “நீண்ட நாட்களாக அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வந்தது என்பது காவல் துறையினருக்கு தெரியவந்தும் அதனை தடுக்காமல் ஏன் விட்டுவிட்டார்கள்? மாவடப்பு என்பது ஆதிவாசி மக்கள் வசிக்கின்ற கிராமம் அங்கிருந்து சாராயம் கொண்டு வந்து, குடித்ததன் மூலம் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதில் உடல்நிலை தேறிய நான்கு பேரை தாங்கள் பார்த்தோம். ஒருவர் கவலைக்கிடமான நிலைமையில் அனுமதிக்கப்பட்டு உளளார். இது போன்று ஒரு வேதனையான சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று உள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்கள், மெத்தபெட்டமன் போன்ற போதை வஸ்துக்கள் இங்கு அதிகமாக புழங்குவதால் மக்கள் உயிருக்கு பாதுகாப்பாற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் தடுத்து நிறுத்தினால் தான், வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்க முடியும். தமிழ்நாடு காவல் துறை மிகவும் வலிமையானது. ஆற்றல் மிக்கது. திறமையான அதிகாரிகளுக்கு முக்கியமான இடங்களில் வாய்ப்பு அளித்து சுயமாக செயல்பட விட்டாலே, இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது. அவரவர்களுக்கு வசதியான ஸ்டேசன்களை வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்து கொண்டு ஆளுங்கட்சியினருடன் இணைந்து செயல்படுவதால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இனிமேலாவது இதையெல்லாம் திருத்த வேண்டும் அல்லது நாட்டு மக்கள் திருத்துவார்கள் என்பதை கூறுவதற்கு கடமைப்பட்டு உள்ளது.
போதை வஸ்துக்களின் சாம்ராஜ்யம் தமிழகத்தில் தலையெடுக்காமல் ஒடுக்கப்பட வேண்டும். காவல் துறை தரப்பில் பூச்சிக் கொல்லி மருந்து உட்கொண்டது போல வினோதமான கற்பனை பதில்கள் எல்லாம் வரும். சினிமாவில் வராத கதை வசனங்களை எல்லாம் ஜோடித்துக் கூறுவார்கள். அதையெல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள். இதையெல்லாம் நினைத்து மக்கள் உள்ளுக்குள் சிரித்துக் கொள்வார்கள். மக்களுக்கு சரியான நேரம் வரும் போது, இவர்களுக்கு ஆப்பு அடிப்பார்கள்” எனப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “அரசு மதுபானங்களின் விலையை இந்த மூன்று ஆண்டுகளில் பன்மடங்கு உயர்த்தி உள்ளது. இதன் காரணமாகத் தான் மதுபானங்களை வாங்க முடியாதவர்கள் கள்ளச் சாராயத்தை நாடி செல்கின்றனர். மதுபான விற்பனை அனைத்தும் ஆளுங்கட்சிக்கு சார்ந்ததாக இருக்கிறது. மதுபான விற்பனையாளர்கள் உற்பத்தியாளர்கள் என அனைவரும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து மதுபான கடைகளையும் மூடுவதாக வாக்குறுதி அளித்தார்கள். இன்றைய முதலமைச்சரும், அன்றைய எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் குடும்பத்துடன் கருப்பு சட்டை அணிந்து முந்தைய ஆட்சி நடக்கும் பொழுது ஆர்ப்பாட்டத்தை எல்லாம் மேற்கொண்டனர். ஆனால் தற்போது டாஸ்மாக் கடைகள் எல்லாம் திறந்து அவர்களது உறவினர்கள் தயாரிக்கின்ற மதுபானங்களின் விலையை உயர்த்தி, எளிய மக்கள் கள்ள சாராயத்தை நாடி செல்கின்ற நிலைமையை உருவாக்கி விட்டனர். கள்ளு கடைகளை திறந்தால் விவசாயிகளுக்கு நன்மை தான். அதனால் கள்ள சாராயம் இருக்காது. அது அரசினுடைய கொள்கை முடிவு. அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu