அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியன் வங்கி மற்றும் இரயில்வே அணிகள்
Coimbatore News- விறுவிறுப்பாக நடந்த கூடைப்பந்தாட்ட போட்டிகள்!
Coimbatore News, Coimbatore News Today- 57-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆடவர் மற்றும் 21-வது சிஆர்ஐ பம்ப்ஸ் மகளிர் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் கடந்த ஜுன் 5-ம் தேதி துவங்கி இன்று வரை 5 நாட்களுக்கு நடைபெற்றது.
இதில் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற 8 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணியும் விளையாடின. இன்று ஆடவர் பிரிவில் மூன்று மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் - கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து பெங்களூரு - பேங்க் ஆஃப் பரோடா அணி விளையாடியது. இதில் பேங்க் ஆஃப் பரோடா அணி 81 - 58 என்ற புள்ளி கணக்கில் வென்றது.
தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை - வருமான வரி அணியை எதிர்த்து சென்னை - இந்தியன் வங்கி அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 73 - 65 என்ற புள்ளி கணக்கில் வென்று 57-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பையை வென்றது.
21-வது சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான மகளிர் பிரிவு மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான போட்டியில் திருவனந்தபுரம் - கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து கெல்கத்தா - கிழக்கு இந்திய இரயில்வே அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 89 - 41 என்ற புள்ளிகணக்கில் வென்றது.
தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் செக்கந்திராபாத் - தென் மத்திய இரயில்வே அணியை எதிர்த்து சென்னை - தென்னக இரயில்வே அணி விளையாடியது. இதில் தென் மத்திய இரயில்வே அணி 71 - 68 என்ற புள்ளி கணக்கில் வென்றது. ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற தென் மத்திய இரயில்வே அணி அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. இத்தொடரில் சிறப்பாக விளையாடிய தென்னக இரயில்வே அணியின் வீராங்கனை ரஷி கோத்தானி என்ற வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu