கோவை குனியமுத்தூரில் புதிதாக கட்டப்பட்ட போலீஸ் நிலையம் திறப்பு

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட காவல் நிலையத்தில் குத்துவிளக்கேற்றப்பட்டது.
கோவை குனியமுத்தூரில் புதிய போலீஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
கோவை குனியமுத்தூரில் இருந்து உக்கடம் செல்லும் புட்டு விக்கி சாலையில் உள்ள புறக்காவல் நிலையம், புதிய கட்டிடங்கள் உடன் புனரமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. அப்போது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி, புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் சந்தீஸ், சண்முகம், மதிவாணன், சுகாசினி, உதவி கமிஷனர் ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், புட்டுவிக்கி புறக்காவல் நிலையம் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பில் இருக்கும். அங்கு உள்ள போக்குவரத்து சாலையில் ஆங்காங்கே சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இதன்மூலம் அந்த பகுதியில் குற்றங்கள் குறைவதற்கு, இந்த புறக்காவல் நிலையம் ஏதுவாக அமையும் என்று தெரிவித்து உள்ளார்.
கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவையில் கடந்த 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் தீவிர கண்காணிப்பிற்குரிய நகரமாக மாறியது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ந்தேதி காரில் சிலிண்டர் குண்டு வெடித்த பின்னர் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக இன்னும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அந்த ஒரு பகுதியாக தான் தற்போது இந்த புறக்காவல் நிலையமும் புதிதாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu