கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண்ணிற்கு கத்தி குத்து

கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண்ணிற்கு கத்தி குத்து
X

சுபஸ்ரீ மற்றும் தினேஷ்.

கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண்ணிற்கு கத்தி குத்து விழுந்தது. இது தொடர்பாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர் லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் பைனான்ஸ் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சமூக வலைத்தளமான instagram மூலம் அறிமுகமான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் தினேஷ் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தினேஷ் சுபஸ்ரீயை காதலிப்பதாகவும் தனது காதலை ஏற்றுக் கொள்ளுமாறும் வற்புறுத்தி உள்ளார். ஆனால் சுபஸ்ரீ காதலை ஏற்க மறுத்ததோடு தினேஷின் செல்போன் எண்ணையும் பிளாக் செய்தார். மேலும் கடந்த இரண்டு மாதங்களாக தினேஷுடன் பேசுவதை முற்றிலும் சுபஸ்ரீ தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ் லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள சுபஸ்ரீ பணிபுரியும் ஷோரூமுக்குள் வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த சுபஸ்ரீயிடம், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது சுபஸ்ரீ தான் காதலிக்கவில்லை என மறுப்பு தெரிவிக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுபஸ்ரீயை தாக்கினார்.

தலை,தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் குத்தியதில் சுபஸ்ரீ படுகாயம் அடைந்து கூச்சலிட்டார். இதனையடுத்து பணியில் இருந்த சக பணியாளர்கள் தப்பிச்செல்ல முயன்ற தினேஷை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் படுகாயங்களுடன் காணப்பட்ட சுபஸ்ரீயை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பந்தய சாலை போலீசார் தினேஷை கொலை முயற்சி வழக்கில் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!