தி கேரளா ஸ்டோரி படம் எப்படி? சான்றிதழ் அளிக்கிறார் ஆளுநர் தமிழிசை

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
தி கேரளா ஸ்டோரி படம் பார்க்க வேண்டிய ஒன்று என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சான்றிதழ் அளித்துள்ளார்.
தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர்கள்நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
சாதி, மதம் பிரித்துப் பார்ப்பவர்களால் திராவிட மாடலை புரிந்து கொள்ள முடியாது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். எனக்கு ஒரே ஒரு சிறிய கேள்விதான். நான் தமிழ்நாட்டில் ஒரு இந்துவாக பிறந்தவள். எப்படி எதை வைத்து பிரித்துப் பார்ப்பதனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகைகளுக்கு நீங்கள் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள். பிரதமர் எல்லா மத விழாக்களுக்கும் வாழ்த்து சொல்கிறார். என்னைப் போன்ற கவர்னர்களும் எல்லாம் மத விழாக்களுக்கும் வாழ்த்துக்கள் சொல்கிறோம் எதையும் பிரித்து பார்ப்பது கிடையாது. அதனால் எப்படி பிரித்துப் பார்ப்பதால் நீங்கள் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள் எனக் கூறினால் நன்றாக இருக்கும்.
ஒரு ஆட்சியில் அறிவிப்புகள் நிறைய வரலாம். ஆனால் அறிவிப்புகளை திரும்ப பெரும் ஆட்சியாக இது இருந்து வருகிறது. மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும். தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் பார்க்கலாம் என இருக்கிறேன். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான படமாக இது உள்ளது. அதற்கு ஆதரவாக இருப்பவர்கள் இந்த படத்தை எதிரானதாக கருதலாம்.
தீவிரவாதத்திற்கு எதிரானது என்றால் அனைவரும் ஆதரிக்கலாம். பிரதமர் மோடி அதைப்பற்றி தான் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாதம் எந்த விதத்தில் வந்தாலும் அதிலும் குறிப்பாக பெண்கள் இளைஞர்களை குறி வைத்து வந்தால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அவர்களுக்கு ஆதரவான கருத்தை வைத்து படம் எடுத்தால் கருத்து சுதந்திரம், அப்படி இல்லை என்றால் கருத்து சுதந்திரம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu