கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய ஆளுநர் ஆர்.என். ரவி
அஞ்சலி செலுத்திய ஆர்.என். ரவி
சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி யோகாசனத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை லாலி ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.
தமிழ்நாடு ஆளுநரும் வேளாண்மை பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் ஈஷா யோகா மையம் உட்பட பல்வேறு யோகா பயிற்சி பள்ளியினரின் யோகாசன நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் யோகாசனத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி யோகாசனம் உடலுக்கும் மனதிற்கும் ஆத்மாவிற்கும் நன்மை தரும் என கூறினார். மேலும் திருமூலரையும் நினைவு கூர்ந்தார். தற்பொழுது யோகாவை அதிகமானோர் ஆர்வமுடன் கற்றுக் கொண்டு இருப்பதாக தெரிவித்த அவர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானார் யோகா பயிற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் முடிவில் பல்கலைக்கழக வளாகத்திற்குள், "தாயின் பெயரில் ஒரு மரம்" என்பதன் அடிப்படையில் மரக்கன்று ஒன்றை ஆளுநர் நட்டு வைத்தார். இந்த மரக் கன்று நடும் நிகழ்வில் தாயின் பெயரில் ஒரு மரம் என்ற தலைப்பில் வைக்கப்பட்ட பேனரின் ஹிந்தி எழுத்துகளுக்கு பதிலாக ஆங்கில எழுத்துக்களால் Ek Ped Maa Ke Naam என்ற இந்தி வார்த்தை அச்சிடப்பட்டிருந்தது. முன்னதாக கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி உட்பட பல்வேறு ஆசிரியர்கள் அலுவலர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu