நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும் அபாயம்

நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும் அபாயம்
X

நுரையுடன் வெளியேறும் வெள்ளநீர்

தடுப்பணையில் இருந்து தண்ணீர் நுரையுடன் வெளியேறி வருகிறது. மேலும் நுரைகள் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் பறந்து செல்கிறது.

கடந்த இரண்டு மாதங்களாக கோடை காலம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. நீர் நிலைகள் வறண்டு காணப்பட்டது. மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவி வந்தது. கோவை மாவட்டத்திலும் கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டது.

கோவையில் பல மாதங்களாக மழை பெய்யாமல் இருந்ததால், பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதனிடையே கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கோவை மாநகரப் பகுதிகளில் மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, நெய்யல் ஆற்றில் தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோவை பேரூர் பகுதி வழியாக நொய்யல் ஆற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர், ஆத்துப்பாலம் அருகே உள்ள சுண்ணாம்பு காளவாய் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு வருகிறது. தொடர் மழை காரணமாக இந்த தடுப்பணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

அதேசமயம் தடுப்பணையில் இருந்து தண்ணீர் நுரையுடன் வெளியேறி வருகிறது. மேலும் நுரைகள் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் பறந்து செல்கிறது. நொய்யல் ஆற்றுக்கு அருகில் செயல்பட்டுவரும் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வாய்க்கல் வழியாக நொய்யல் ஆற்றில் கலப்பதால் நுரையுடன் தண்ணீர் வெளியேறி வருவதாகவும், இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறும் அப்பகுதி மக்கள், இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story