ஆன்லைன் பட்டாசு விற்பனையை தடை செய்ய பட்டாசு வியாபாரிகள் கோரிக்கை
செய்தியாளர்கள் சந்திப்பில் பட்டாசு வியாபாரிகள் சங்கத்தினர்.
கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சங்கத்தின் தலைவர் சின்னுசாமி, செயலாளர் பாரதிமோகன், அமைப்பாளர் இராமையா ஆகியோர் ஆன்லைன் பட்டாசு வர்த்தகத்தால் சிறு வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய அவர்கள், ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தும் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுவதாகவும் இதனால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக கூறினர்.
ஆன்லைன் விற்பனையால் அரசிற்கு எந்த லாபமும் இல்லை என கூறிய அவர்கள் ஆன்லைன் விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும் என்றனர். ஆன்லைன் மூலம் பட்டாசுகளை ஆர்டர் செய்யும் பொழுது பாதுகாப்பில்லாமல் வழக்கமான ட்ரான்ஸ்போர்ட் வாகனங்களிலோ கார்களிலோ எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டனர். மேலும் தள்ளுபடி என்ற பெயரில் தரம் இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்வதாக குற்றம் சாட்டினர். ஆன்லைனில் போலி விளம்பரங்களை கொடுத்து தரம் இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்வதாகவும், சிவகாசியை மையமாகக் கொண்டு கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து தரம் இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்வதாக தெரிவித்த அவர்கள், இது போன்று விற்பனை செய்பவர்கள் ஜிஎஸ்டி பில் தருவதில்லை எனவும் இதனால் பட்டாசுகளை வாங்கி கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கவும் முடியாது என கூறினர். குறிப்பாக உற்பத்தி உரிமம் இல்லாத கம்பெனியினர் ஜிஎஸ்டி கட்டாதவர்கள் தான் இது போன்ற வேலைகளை செய்வதாகவும் கூறினர்.
ஆன்லைன் பட்டாசுகள் அனைத்தும் தரமற்றவை என குற்றம் சாட்டிய அவர்கள், அரசு இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். வியாபார உரிமம் 10 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் நிலையில் அதனை 15 நாட்களாக நீட்டித்து தர வேண்டும் எனவும் பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகளையும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் சரவெடியை பழைய முறைப்படி கெமிக்கல் கொண்டு தயாரிக்க கேட்டு கொண்டுள்ளதாகவும் ஏனென்றால் சரவெடியை அரசு கூறிய நிபந்தனைகளின் படி தயாரிக்க இயலாது என தெரிவித்தனர்.
மேலும் தீயணைப்புத் துறையின் அறிவுறுத்தலின்படி பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து பட்டாசு கடைகளிலும் நோட்டீஸ் வழங்க இருப்பதாகவும் கடைகளில் பிளக்ஸ் ஒட்டி இந்த தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவோம் எனவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu