மேட்டுப்பாளையம் பெள்ளாதி குளம் நிரம்பி வழிவதால் மகிழ்ச்சியில் விவசாயிகள்

பெள்ளாதி குளம்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி குளம் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை பெள்ளாதி பகுதியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது. இக்குளத்தை சுற்றிலும் உள்ள பெள்ளாதி, மொங்கம்பாளையம், மொள்ளேபாளையம், சின்னத் தொட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை, தென்னை, கருவேப்பிலை உள்ளிட்ட பல்வேறு வகை பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் வெயிலும், மாலை வேளைகளில் தொடர்ந்து கனமழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 216 மி.மீ மழையும், குறிப்பாக அதில் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 44 மி.மீ மழையும் பெய்துள்ளது. தொடர் கனமழை காரணமாக பெள்ளாதி பகுதியில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் நிரம்பி தடுப்பணையின் வழியாக தண்ணீர் வழிந்து ஓடி வருகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி குமரேசன் கூறும்போது தொடர் கனமழையின் காரணமாக 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெள்ளாதி குளம் தற்போது நிறைந்து தடுப்பணையின் வழியாக தண்ணீர் வழிந்தோடி வருகிறது. இதனால் தங்கள் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் எனவும், குடிநீர் பற்றாக் குறை ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், குளத்தில் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை பொதுப்பணித்துறையினர் அகற்ற வேண்டும் எனவும், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 3 மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் இக்குளம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளையும், முட்புதர்களையும் அகற்ற வேண்டும். அப்போதுதான் சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாய நிலங்கள் பாசன வசதியினை முழுமையாக பெற முடியும். எனவே, பொதுப்பணித்துறையினர் இந்த குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu