ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது திராவிட தமிழர் கட்சி போலீசில் புகார்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது திராவிட தமிழர் கட்சி போலீசில் புகார்

செய்தியாளர்கள் சந்திப்பில் திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி.

மதக்கலவரத்தை தூண்டுவது போல பேசியதாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

திராவிட தமிழர் கட்சி தலைவரும் வழக்கறிஞருமான வெண்மணி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு ஒன்று அளித்துள்ளார்,

அதில் ஆந்திர மாநில துணை முதல்வரான பவன் கல்யாண் திருப்பதியில் தமிழர்கள் மத்தியில் பேசும்போது தமிழகத்தில் இந்து மதத்தை பற்றி இழிவாக பேசுகிறார்கள் அவர்களுக்கு எதிராக ஏன் கொந்தளிக்க கூடாது என பேசியது அதிர்ச்சி அளிக்கிறது. இது மதக்கலவரத்தை தூண்டுவது போல் உள்ளது. அது போல் மாட்டு கொழுப்பு குறித்தும் பேசி உள்ளது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை இழிவு படுத்துவது போல் உள்ளது.‌எனவே அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெண்மணி கூறியதாவது:-

நடிகரும் ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன்கல்யாண் இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கி பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும், பல்வேறு மதமக்களிடையே மதக்கலவரத்தையும் தூண்டும் விதமாகவும் பேசி வருகிறார்.இது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் திருப்பதியில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் மாட்டிறைச்சி கொழுப்பு தடவியதால் தீட்டு பட்டுவிட்டதென தொடர் பிரச்சாரத்தை செய்து கொண்டிருப்பது காலகாலமாக மாட்டிறைச்சியை உணவாக உட்கொள்பவர்களையும், தலித்துகளையும் சாதி ரீதியாக இழிவுபடுத்தும் செயலாகும். மேலும் நான் பிறந்ததில் இருந்தே மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்பதால் மேற்படி பவன்கல்யாண் பேச்சு எனக்கு பெருத்த அவமானத்தையும் இழிவையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி அம்பேத்கர் சொன்ன அரசியல் சட்டவிரோத சாதிய வருணாசிரம சனாதனக் கட்டமைப்பு ஒழிப்பு குறித்து தான் பேசியிருந்தார். அரசியல் சட்டத்தின் நோக்கமும் சமத்துவ சமூகம் தான் ஆனால் நடிகர் பவன்கல்யாண் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றபோதும், துணை முதலமைச்சராக பதிவேற்றபோதும் எடுத்துக் கொண்ட இரகசிய காப்பு பிரமாணத்தை மீறி சமய சார்புடன் நடந்து கொள்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்.

இந்திய குற்றவியல் சட்டங்களின்படி கிரிமினல் குற்றம் குறித்து தகவல் தெரிந்த எந்த ஒரு நபரும் காவல் துறையில் புகார் அளிக்கலாம் என்ற அடிப்படையில் பவன் கல்யாண் மீது புகார் அளிக்கிறேன், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை , திருப்பதி லட்டு பிரச்சனை எவ்வித தொடர்புமற்ற, தலித் மற்றும் சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிராக வன்மத்தை பரப்பி சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக பேசியும், தமிழ்நாட்டின் துணை முதல்வரை ஒருமையில் பேசி, இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் குற்றச் செயலில் ஈடுபட்ட நடிகர் பவன்கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story