கொல்கத்தா மருத்துவர் கொலையை கண்டித்து கோவையில் மருத்துவர்கள் போராட்டம்

கொல்கத்தா மருத்துவர் கொலையை கண்டித்து கோவையில் மருத்துவர்கள் போராட்டம்
X

மருத்துவர்கள் போராட்டம்

கொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை ஏற்படுத்த வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறுகிறது.

மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்தனர்.

இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே பெண் மருத்துவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை ஏற்படுத்த வலியுறுத்தியும் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் கோவை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் பணிக்கு வரவில்லை. கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் 6 ஆயிரம் நபர்கள் புற நோயாளிகளாக சிகிச்சைக்காக வருவது வழக்கம். இந்த நிலையில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பினால், சிகிச்சை தருவதில் தொய்வடைந்தன. மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு, அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு மருத்துவர்கள் வழக்கமான முறையில் சிகிச்சை தந்து வருகின்றனர்.

தினமும் வரும் புறநோயாளி பிரிவில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் காத்துக் கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Tags

Next Story