கோவையில் தொடர்ந்து திமுக முன்னிலை: தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கோவையில் தொடர்ந்து திமுக முன்னிலை: தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
X

இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுக

திமுக முன்னிலை வகித்து வருவது அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டனர்.

அதில் திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். 64.89 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கி, நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மூன்றாவது சுற்று முடிவில் திமுக 19005 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 80040 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அண்ணாமலை 61035 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 33583 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதேபோல பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியிலும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி முன்னிலை வகித்து வருகிறார். கோவை தொகுதி மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருவது அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?