கோவையில் 1.18 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி

கோவையில் 1.18 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி
X

வெற்றி சான்றிதழை பெற்ற கணபதி ராஜ்குமார்

1 இலட்சத்து 18 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டனர். அதில் திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். 64.89 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 7293 தபால் வாக்குகள் பெறப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். பாஜக மாநிலத் தலைவர் தொடர்ந்து பின்னடைவு சந்தித்து வந்தார். சில சுற்றுகளில் திமுகவை விட கூடுதலாக வாக்குகளை பெற்றாலும், அவரால் இறுதிவரை முன்னிலை பெற முடியவில்லை.

இறுதியாக 24 சுற்றுகள் மற்றும் தபால் வாக்குகள் சேர்த்து கோவை மக்களவை தொகுதியில் 1 இலட்சத்து 18 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார். திமுக 568200 வாக்குகளும், பாஜக 450132 வாக்குகளும், அதிமுக 236490 வாக்குகளும், நாதக 82657 வாக்குகளும் பெற்றனர். இதனால் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கோவை தொகுதியில் நேரடியாக போட்டியிட்டு வென்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வென்ற, அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story