மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு : திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் கண்டனம்..!

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு : திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் கண்டனம்..!
X

திமுக கவுன்சிலர்கள் கூட்டம்

தமிழக மக்கள் வஞ்சிக்கப்படுவது, இந்திய நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கு எதிரானது.

கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கூட்டம், வடகோவை பகுதியில் உள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. இதில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பிறகு பொன்னான திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கைப் பிரகடனமாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது. ஆனால், இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை.

மாறாக, அரசியல் காரணங்களுக்காக பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது. நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது. தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடியது. சமீபத்தில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க பேரிடர் நிவாரணத்தை வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தியபோதிலும், இந்த ஒன்றிய வரவு-செலவுத் திட்டத்திலும் போதிய நிதி வழங்கப்படவில்லை.

37,000 கோடி ரூபாய் பேரிடர் நிவாரணமாக வழங்குவதற்கான ஒரு விரிவான அறிக்கையினை தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த நிலையில், ஒன்றிய அரசு சுமார் 276 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வழங்கியுள்ளது. அதுவும் சட்டரீதியாக வழங்கப்பட வேண்டியது தான். ஆனால், இன்று உத்தரகாண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் மட்டுமின்றி, பீகார் மாநிலத்திற்கு மட்டும் 11,500 கோடி ரூபாய் பேரிடர் தடுப்புப் பணிகளுக்காக வழங்கப்பட உள்ளது.

இது, தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ இரயில் திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. மொத்தத்தில் தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை இது. தமிழக மக்கள் இவ்வாறு வஞ்சிக்கப்படுவது இந்திய நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கு எதிரானது” எனத் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture