கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்
Coimbatore News- திமுக அதிமுக வாக்குவாதம்
Coimbatore News, Coimbatore News Today,- கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், ஓரே நேரத்தில் 333 தீர்மானங்கள் கொண்டு வரப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர். சாதாரணக் கூட்டத்திற்கு முதல் நாள் 200க்கும் மேற்பட்ட தீர்மானங்களை அனுப்பினால், அதை படிப்பதற்கு கூட வாய்ப்பு இல்லை என துணை மேயரிடம் முறையிட்டார். அப்போது திமுக கவுன்சிலர்களுக்கும், அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மாமன்ற கூட்டத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று பொன்னான ஆட்சி நடத்திவரும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும் சிறப்பு தீ்ர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதனைதொடர்ந்து மாநகராட்சி கூட்டத்தில் 333 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக கேரள மாநிலம் சிறுவாணி அணையில் இருந்து தினமும் நீர்கசிவு ஏற்பட்டு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேறுவது ஆணையாளர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்து இருப்பதாகவும், இந்த நீர் கசிவினை சரி செய்ய தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் மூலம் வழிமுறைகளை தேர்வு செய்ய 17 லட்சம் ஆய்வு கட்டணம் மாநகராட்சி பொது நிதியில் இருந்து வழங்கவும், கசிவை சரி செய்ய உத்தேச செலவு 3 கோடி ரூபாயினை நகராட்சி நிர்வாக இயக்குநர் மூலமாக அரசு நிதியுதவி பெற்று செயல்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைய இருக்கும் நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓண்டிபுதூர் பகுதியில் உள்ள 20.72 ஏக்கர் அரசு புறம்போக்கு - திறந்த வெளி சிறைச்சாலை என்ற வகைப்பாட்டில் இருக்கும் நிலத்தை, சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பொருட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு நிலமாறுதல் செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த 6.4.24 ம் தேதி முதல் 17-4-24 ம் தேதி வரை கட்டுகடங்காமல் தீப்பற்றிய நிலையில், இந்த தீயை அணைப்பதற்கான செலவு கணக்குகள் குறித்து மாமன்றத்தின் பார்ரவைக்கு ஒப்புதல் தீர்மானமாக கொண்டுவரப்பட்டது.
மொத்தம் செலவு 76,70,318 காட்டப்பட்டது. இதில் உணவு, டீ, காபி, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வாங்கியதற்க்கு மட்டும் 27,51,678 ரூபாய் கணக்கு காட்டப்பட்டது. இதை ஏற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே நேரத்தில் 333 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் எண்களை சொல்லி மொத்தம், மொத்தமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடதக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu