கோவை மாநகராட்சியில் 5 வணிக கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ; வரி செலுத்தாததால் நடவடிக்கை

Coimbatore News- குடிநீர் இணைப்பு துண்டிப்பு
Coimbatore News, Coimbatore News Today- நடப்பு 2023-24ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி வசூலில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வரி செலுத்த பொதுமக்களின் வசதி கருதி மாநகராட்சியின் வார்டு பகுதிகளில் இன்றும், நாளையும் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடத்தப்படுகிறது.
கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.56, 57ல் ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம் பகுதிகளிலும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வாண்டு 75 மாரியம்மன் கோவில் தெரு சீரநாயக்கன்பாளையத்திலும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வாண்டு எண்.85 ல் போத்தனூர் கோணவாய்க்கால்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், வார்டு எண்.87-ல் குனியமுத்தூர் அனைத்து குடியிருப்பு நல சங்கங்களின் கூட்டமைப்பு அலுவலகம், அம்மன் கோவில் சாலையிலுள்ள வணிக வளாகத்திலும், வடக்கு மண்டலம் வார்டு எண். 15 சுப்ரமணியம்பாளையம், அங்கன்வாடி மையத்திலும், மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.32ல் சிறுவர் பூங்கா, சங்கனூர் நாராயணசாமி வீதியிலும், வார்டு எண்.62 பெருமாள் கோவில் வீதி, மாநகராட்சி வணிக வளாகம், வார்டு எண்.80ல் கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், வார்டு எண்.84ல் ஜி.எம்.நகரில் உள்ள தர்கத் இஸ்லாம் பள்ளியிலும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறுகிறது.
இதுதவிர 31.03.2024 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக ஏனைய நாட்களில் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம்போல் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை செயல்படும் எனவும், எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக கட்டிடத்தில் சொத்து வரி நிலுவை வைத்திருந்த 5 குடிநீர் இணைப்புகள் ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில் துண்டிக்கப்பட்டது. லட்சக்கணக்கில் வரி செலுத்தாமல் உள்ளவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் எனவும், சிறப்பு முகாம்களை பயன்படுத்தி வரி செலுத்துமாறும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu