கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம்: உப்பை தூவி பக்தர்கள் வழிபாடு

கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம்: உப்பை தூவி பக்தர்கள் வழிபாடு

கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. உப்பை தூவி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

கோவை டவுன்ஹால் பகுதியில் கோனியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோனியம்மன் கோவை நகரின் காவல் தெய்வமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றதை ஒட்டி, இன்று காலை 4 மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கோனியம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் எழுந்தருளிய தேர் ராஜவீதியில் தேர்திடலில் இருந்து புறப்பட்டு ஒப்பணக்கார வீதி, கருப்ப கவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் தேர் திடலை அடைந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் மீது பக்தர்கள் உப்பினை வீசி வழிபட்டனர். இந்த தேர் திருவிழாவில் பங்கேற்க வந்த பக்தர்களுக்கு கோயமுத்தூர் அத்தர் ஜமாத் பெரிய பள்ளிவாசல் சார்பாக தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.

இன்று 10 ஆயிரம் இந்து பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்கியதாகவும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், கோவையில் வரக்கூடிய இந்து முஸ்லிம் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை வெளிக்காட்டும் வகையிலும் தண்ணீர் பாட்டில்களை வழங்கியதாக பள்ளி வாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story