போராட்டத்தை மீண்டும் கையில் எடுக்க கோவை துாய்மை பணியாளர்கள் முடிவு

போராட்டத்தை மீண்டும் கையில் எடுக்க கோவை துாய்மை பணியாளர்கள் முடிவு
X
இம்மாத இறுதிக்குள் ஊதிய உயர்வை மாநகராட்சி நிறைவேற்றாத பட்சத்தில் மீண்டும் போராட்டத்தை கையில் எடுக்க துாய்மை பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் 6,359 துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 3,099 பேர் நிரந்தர பணியாளர்கள், 3,260 பேர் தற்காலிக பணியாளர்கள். இது தவிர 610 கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த குறைந்தபட்ச தினக்கூலியான, ரூ.721 வழங்க வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் கடந்த அக்.,2 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தூய்மைப்பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் குப்பை தேங்கியதையடுத்து, கூட்டமைப்பினருடன், மாநகராட்சி அதிகாரிகள் நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் அதில் உடன்பாடு எட்டவில்லை. ஊதிய உயர்வு குறித்து மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் உறுதி அளித்ததால், போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், சம்பள உயர்வு வழங்க, அரசின் அனுமதி கேட்டு அறிக்கை அனுப்புவது என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், துாய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீபாவளிக்குப் பின், தொடர் போராட்டம் நடத்தியும் பிரயோஜனமில்லை.

இது குறித்து தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது: தீபாவளி முடிந்து போராட்டம் துவங்கியதன் விளைவாக, மாநகராட்சியில் டன் கணக்கில் குப்பை தேக்கம் அடைந்தது. இதையடுத்து, கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய, மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர், ஒப்பந்த துாய்மை பணியாளருக்கு டிசம்பர் இறுதிக்குள் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று வாய்மொழியாக உறுதியளித்தனர். இதை நம்பி வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, ரூ. 333 தான் ஒப்பந்த பணியாளர்கள் தினக்கூலி வாங்குகின்றனர். ஆனால், இதுவரை ஊதிய உயர்வு அறிவிப்பு வரவில்லை. விரைவில், ஊதியம் உயர்வு வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோமே தவிர வாபஸ் பெறவில்லை.

சம்பள உயர்வு அறிவிப்பு வரவில்லையேல், மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம். கடந்த முறை போல், எந்த காரணத்துக்காகவும் போராட்டத்தை ஒத்தி வைக்கப்போவதில்லை. பொங்கல் நெருங்கும் நிலையில், இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி என்று கூறினர்

Tags

Next Story