கோவையில் மின்னணு கழிவுகளை பிரித்து வழங்க மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்
மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்.
கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளிலும் தினமும் 1250 டன் திடக்கழிவுகள் உற்பத்தியாகிறது. இத்திடக்கழிவுகளில் வீடுகள், வியாபார நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் உற்பத்தியாகும் மின்னனு கழிவுகள் தினமும் 10 டன் அளவில் தொலையியக்கி, மின்கலம், மின் விளக்கு, மின்விசை, தொலைபேசி மற்றும் மின்னனு சாதனங்கள் முறையாக பிரிக்காமல் திடக்கழிவுகளில் சேகரிக்கப்படுகிறது. இக்கழிவுகளை சேகரிக்க கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் லாலி ரோடு அருகே உள்ள திட்ட சாலையில் பிரத்யேக மின்னனு கழிவுகள் சேகரிக்கும் இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 பிரிவு 31ன்கீழ் இனிமேல் இக்கழிவுகளை பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் முறையாக பிரித்து அம்மையத்தில் தர வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கென இங்கு தினமும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற்ற மின்னனு கழிவு மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வெள்ளகிணறு பிரிவு மற்றும் துடியலூர் முதல் இடிகரை செல்லும் சாலையில் வடவள்ளி, கவுண்டம்பாளையம், வீரகேரளம் கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்புகளில் ஏற்பட்ட கசிவுகளை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு, கசிவுகளை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். பின்னர் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சௌரிபாளையம், கருணாநிதி நகரில் மழைநீர் வடிகாலை தூர்வாரவும், சிறுபாலம் அமைப்பதற்கான உரிய திட்டமதிப்பீடு தயாரிக்கவும் மேயர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu