பேக்கரி கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த கோவை நுகர்வோர் கோர்ட்

பேக்கரி கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த கோவை நுகர்வோர் கோர்ட்
X

Google Pay ஜிபே (கோப்பு படம்)

பேக்கரி கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்தது.

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 51). இவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவில், கோவை அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் நடத்தும் ராகம் பேக்கரியில் கடந்த 20.7.2022 அன்று சிக்கன் சாண்ட்விச் ரூ.180-க்கு வாங்கினேன். இதற்கான பணத்தை ஜி-பே மூலம் செலுத்தினேன். எனக்கும் பணம் சென்று விட்டதாக மெசேஜ் வந்தது. ஆனால் பேக்கரி காசாளர் ஜி.பே. மூலம் அனுப்பிய பணம் தங்களது கணக்கிற்கு வரவில்லை என்று கூறினார். நான் தெளிவாக கூறியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மீண்டும் ஜி-பே மூலம் பணம் செலுத்தினேன்.

அதன் பின்னர் வங்கிக்கு சென்று ஸ்டேட்மென்ட் பார்த்த போது ரூ.180 பேக்கரி கடை நிர்வாகத்துக்கு பண பரிமாற்றமாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கான வங்கி கணக்கு விவரங்களை கொடுத்த போதும், எனக்கு பணத்தை திருப்பி தராமல் பேக்கரி காசாளர் அலைக்கழித்தார். பின்னர் அந்தநிறுவனத்தின் மேலாளரிடம் தெரிவிக்குமாறு கூறினார். அவரிடமும் கூறினேன். பணத்தை காசாளரிடம் பெற்றுக் கொள்ளுமாறு மேலாளரும் கூறினார்.

ஆனால் மீண்டும் பேக்கரிக்கு வந்து காசாளரிடம் கேட்டபோது, வேறு வேலையே இல்லையா, இது தான் உன் வேலையா? எனக் கூறி மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் பேசினார். ஒரு ஆண்டு ஆகியும் ரூ.180 பணத்தை திரும்ப தரவில்லை. எனவே கோர்ட்டு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். மனுவை விசாரணை நடத்திய நீதிபதி தங்கவேலு, உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.180-ஐ திருப்பி கொடுப்பதுடன், இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், கோர்ட்டு செலவாக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!