கோவையில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில் துவக்கம்
ரயில் சேவையை துவக்கி வைத்த வானதி சீனிவாசன்
அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் பிராண பிரதிஷ்டை கடந்த ஜனவரி 22ம் தேதி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த பிரதிஷ்டையில் முக்கியமான பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.
இதையடுத்து அயோத்தி ராமர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர். அவர்களுக்கான ரயில் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் கோயம்புத்தூரில் இருந்து அயோத்திக்கு, 745 பயணிகளோடு, நேற்று முதல் சிறப்பு ரயில் சேவை துவங்கியது. இதனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் சின்ஹா, துணை மேலாளர், ரயில்வே அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் மலர் தூவி பக்தர்களை வழி அனுப்பி வைத்தனர். இந்த ரயில் வரும் ஞாயிற்றுக்கிழமை அயோத்தியை சென்றடைகிறது. இதற்காக ரயில்வே துறை சார்பில் பலத்த காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று சிறப்பு ரயில் துவங்கியதையடுத்து 100க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மோப்ப நாய்களை கொண்டு வெடிகுண்டு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. வரும் 13ஆம் தேதி அடுத்த ரயில் கோவையில் இருந்து அயோத்திக்கு செல்ல உள்ளது. இந்த இரயில் சேவை அயோத்திக்கு செல்ல உள்ள பக்தர்களுக்கு பயன் உள்ளதாக இருக்குமெனவும், அதிக அளவிலான பக்தர்கள் அக்கோவிலுக்கு செல்ல உதவுமெனவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu