ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி
கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதேபோல திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக கோவையில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பணத்தை கொடுப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டோம் என்ற அண்ணாமலையின் கருத்தை ஒப்பிட்டு, பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்த அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த காட்சிகள் எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் வெளியாகவில்லை.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில், “இந்த வீடியோவை காவல் துறையினர் சரி பார்ப்பிற்காக அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 27 ம் தேதி அண்ணாமலை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாக கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அப்போது கடந்த 1989 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வீர கணேஷ் என்பவரின் தாயாரிடம் அண்ணாமலை ஆசி பெற்றார். அப்போது உடனிருந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுத்து வீர கணேஷின் தாயாரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ”கோவையில் திமுக, அதிமுகவினர் பணத்தை கொண்டு வந்து நூற்றுக்கணக்கான கோடி கொட்டுவார்கள். நாங்கள் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கொடுக்க மாட்டோம். மாற்றத்தை நம்பி வந்திருக்கின்றோம். செலவு குறைந்த தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும். அடுத்த 40 நாட்கள் பூத கண்ணாடி போட்டு ஊடகங்கள் எங்களைப் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu