உலக தண்ணீர் தினம்: கோவையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், தண்ணீரின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதுதவிர, பல்வேறு சமூக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் தண்ணீரை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு IWWA எனும் இந்திய நீர் பணி சங்கத்தின் கோவை கிளை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,கோவை மாநகராட்சி, கோவை பாரதியார் பல்கலைகழகம் ஆகியவை சார்பில் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் கோவை நேரு ஸ்டேடியம் வளாகத்தில் நடைபெற்றது.
உலகில் காண விரும்பும் மாற்றமாக இருங்கள் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த மாரத்தானில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகர காவல் ஆனையர் பாலகிருஷ்ணன், இந்திய நீர் பணிகள் சங்கத்தின் தேசிய துணை தலைவரும் கோவை கிளை தலைவருமான மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு மாரத்தானை துவக்கி வைத்தனர்.
பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தானில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பணிக்கு செல்லும் மகளிர் மற்றும் ஆண்கள் உட்பட பல்வேறு வயது பிரிவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். தொடர்ந்து மராத்தானில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் பொதுவாக பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu