கோவையில் விஷம் வைத்து கொல்லப்பட்ட நாய்.. சமூக ஆர்வலர் புகார்...
கோவை ரத்தினபுரி காவல் நிலையம். (கோப்பு படம்).
தமிழகத்தில் சில இடங்களில் வனவிலங்குகள் விஷம் வைத்து கொல்லப்படும் சம்பவம் அரங்கேறியுள்ளது. குறிப்பாக, மலையடிவாரப் பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள், காட்டு எருமை உள்ளிட்ட மிருகங்கள் விஷம் வைத்து கொல்லப்படுவது உண்டு. அதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமான ஒன்று. இந்த நிலையில், கோவையில் தெருவோர நாய் ஒன்று விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தற்போது புகார் எழுந்துள்ளது.
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பிரபா. சமூக ஆர்வலரான இவர், பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும், தனது சொந்த செலவில் ரத்தினபுரி பகுதிகளில் தெருவோரங்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு வழங்குவதோடு, அந்த நாய்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகளையும் அளித்து வரும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த சில ஆடுகளை தெரு நாய்கள் கடித்ததாகக் கூறப்படுகிறது. அதில், சில ஆடுகள் இறந்ததாகவும் கூறப்படுகிறது. தெருவோர நாய்கள் கடித்ததாலேயே ஆடுகள் இறந்ததாக அந்தப்பகுதியில் தகவல் பரவியது. இந்த நிலையில் ரத்தினபுரி பகுதியில் உள்ள தெருநாய்களுக்கு வழக்கம்போல உணவு கொடுப்பதற்காக பிரபா சென்றுள்ளார்.
அப்போது, ஒரு நாயின் கால்கள் கட்டப்பட்ட நிலையில் அங்கு இறந்து கிடந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபா அந்த பகுதியில் உள்ளவர்களும் விசாரித்துள்ளார். விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நாயை விஷம் வைத்துக் கொன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சமூக ஆர்வலரான பிரபா ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், நாய்க்கு விஷம் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த திருவாசகம் என்பவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். தெருவோர நாய் ஒன்று விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் ரத்தினபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu