போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்... கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேச்சு...
தலைக்காயம் குறித்து கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு வாக்கத்தானை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுநர் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், விபத்தில் சிக்கினால் ஏற்படும் பாதிப்புகள், அதனால் ஏற்படும் இழப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான தலைக்காயங்கள் சாலை விபத்துகளாலேயே ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக,ஆண்டுதோறும் உலக அளவில் 10 முதல் 12 சதவீத மக்கள் தலையில் காயம் ஏற்படுவதால் இறக்கின்றனர். அதனாலேயே தலைக்கவசம் அவசியம் என காவல் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தலைக்கவசம் உயிர் கவசம் என விழிப்புணர்வு வாசகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தலைக்காயம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக கோவை ராயல்கேர் மருத்துவமனை சார்பாக தலைக்காயம் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. மருத்துவர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற,வாக்கத்தானை கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்றபடி பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்தாலே பெரும்பான்மையான விபத்துக்களை தவிர்க்க இயலும். கோவை மாநகரை பொறுத்தவரை போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு புதிய முறைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது என காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் துவங்கிய வாக்கத்தான் பிரதான சாலை வழியாக நஞ்சப்பா சாலை ரயல்கேர் மருத்துவமனையை வந்தடைந்தது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu