கோவையில் கன மழை ; சாலைகள், குடியிருப்புகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி
Coimbatore News- கோவையில் பெய்த கனமழையால் வௌ்ளத்தில் நீந்தி சென்ற வாகனங்கள்.
Coimbatore News, Coimbatore News Today- கோவை நகரின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. பீளமேடு,கணபதி, மசக்காளிபாளையம், சிங்காநல்லூர் இராமநாதபுரம், சாய்பாபா காலனி, உக்கடம், காந்தி புரம் என அனைத்து பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. கோவை காமராஜர் சாலை, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, கிராஸ்கட் சாலை, பூ மார்கெட் , அவினாசிலிங்கம் கல்லூரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது. கணபதி சிவசக்தி காலனி பகுதியில் பெய்த கன மழை காரணமாக, மழைநீர் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது.மேலும் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு , வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு ஆகியவற்றிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதேபோல கோவை மாநகராட்சி ராஜீவ் காந்தி நகர் பகுதியிலும் மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் முறையான வடிகால் வசதி இல்லாததால் தெருக்களில் தண்ணீர் தேங்கியது.இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோன்று சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அய்யர் லேஅவுட் பகுதியில் மழை நீர் கழிவு நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. கழிவுநீர் கலந்த மழை நீர் வீடுகளுக்கு புகுந்ததால் தவித்த பொது மக்கள், மழை நின்றவுடன் அவற்றை சிரமத்திற்கு மத்தியில் அப்புறப்படுத்தினர்.
பூ மார்க்கெட் பகுதியில் பெய்த மழை காரணமாக மார்க்கெட் வளாகத்தில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக பூ வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.பூக்களும் மழையில் நனைந்தால் பாதிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து நகரின் முக்கிய சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றக் கூடிய பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu