கோவை நாம் தமிழர் வேட்பாளர் கலாமணி வேட்பு மனுத்தாக்கல்!
கலாமணி வேட்பு மனுத்தாக்கல்
நாம் தமிழர் கட்சி சார்பில் கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் நாம் தமிழர் கட்சியின் கோவை பாராளுமன்ற தொகுதி கலாமணி ஜெகநாதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, 'நாளை முதல் எங்களது தேர்தல் பிரச்சாரங்களை துவங்க உள்ளோம். காலையில் வேட்பு மனு தாக்கலுக்காக வாகனங்களில் ஊர்வலமாக வரும் போது காவல்துறையினர் எங்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
மற்ற கட்சிகள் வரும்போது போலீசார் இப்படி தடுப்பதில்லை. குறிப்பாக மோடி கோவை வந்தபோது பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று நாங்கள் ஓரமாக பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வந்து கொண்டிருந்தோம், போலீசார் பின் தொடர்ந்து வந்து தடுத்து நிறுத்தினர். பொதுமக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு போலீசார் தான் காரணம். நாளை பாஜகவின் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்ய இப்படி வரும்போதும் போலீசார் இப்படித்தான் நடவடிக்கை எடுப்பார்களா என பார்க்கலாம்.
மற்ற கட்சிகள் என்ன செய்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை, தமிழகத்தின் மூன்றாவது கட்சியான நாம் தமிழர் கட்சி ஊர்வலத்திற்கும் கூட்டத்திற்கும் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறைக்காகவும் பொது மக்களுக்காகவும் தான் நாங்கள் போராடுகிறோம். அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்படும் உரிமைகள் எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் உரிமைகளை போராடி வாங்கி வருகிறோம். என்.ஐ.ஏ சோதனை, சின்னம் வழங்காதது இவை அனைத்துமே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைதான். மக்களுக்கு இது தெரியும்' என தெரிவித்தார்.
கட்சி சின்னம் பெறுவதற்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காத நீங்கள் மக்கள் பிரச்சனைக்கு எவ்வாறு நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு சிறிய தடுமாற்றத்திற்கு பின்னர் பதில் அளித்தவர், சின்னமே இல்லை என்றாலும் எங்களால் வேட்பு மனு தாக்கல் செய்து, எந்த சின்னத்தையும் இந்தியா முழுவதும் பரப்பும் அளவிற்கு எங்களது ஐடி பிரிவு உள்ளது என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu