கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு..!

கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு..!
X

மேயராக பதவியேற்ற ரங்கநாயகி

கோவை மாநகராட்சி மேயராக போட்டியின்றி ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியின் மேயருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. திமுக கூட்டணியின் சார்பில் மேயர் வேட்பாளராக 29 வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டிருந்தார். காலை 10:30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் துவங்கியது. திமுக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட ரங்கநாயகி மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

காலை 10.30 மணி முதல் 11 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், வேறு யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி மேயராக போட்டியின்றி ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகியிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து சக கவுன்சிலர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு அமைச்சர் நேரு, அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோர் வந்தனர்.

மேயர் அங்கி அணிந்தபடி வந்த ரங்கநாயகி, அமைச்சர்கள் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். கடவுள் அறிய உறுதி ஏற்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி மற்றும் நேரு ஆகியோர் ரங்கநாயகியை மேயருக்கான இருக்கையில் அமர வைத்து செங்கோலை வழங்கினர்.

கோவை மாநகராட்சி மேயராக பதவியேற்ற பின்னர் ரங்கநாயகி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “எனக்கு இந்த பதவியை அளித்த கலைஞர், முதலமைச்சர், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, முத்துசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், திமுக மாவட்டச் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இப்போது தான் பொறுப்பு ஏற்றுள்ளேன். எனக்கு எனது வார்டை பற்றி தான் தெரியும். இனி அனைவருடனும் கலந்து ஆலோசித்து எது அவசியம், எது அவசரம் என்பதை கேட்டு செயல்படுவேன்” எனத் தெரிவித்தார். கோவை மக்களுக்கு என்ன திட்டங்களை செயல்படுத்துவீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விகளுக்கு, “நான் இப்போது தான் பொறுப்பேற்றுள்ளேன். எனது பணிகள் பற்றி படிப்படியாக தெரிந்து கொண்டு செயல்படுவேன். நான் செய்வதை உங்களுக்கு தெரியப்படுத்துவேன். மக்களின் தேவைகளை கேட்டறிந்து செயல்படுவேன்” எனத் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாநகராட்சியில் புதிதாக மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பணிகளுக்கு உற்றத்துணையாக இருப்போம்.

கோவை மாநகராட்சிக்கு நிறைய பணிகளை செய்ய வேண்டும் என முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். சாலை, குடிநீர் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவோம். மாமன்ற உறுப்பினர்கள் அவர்களது பகுதிகளுக்கு தேவையான திட்டங்களை கேட்டுள்ளார்கள். அதையும் நிறைவேற்ற பாடுபடுவோம். சிறுவாணி மற்றும் ஆழியார் அணை பிரச்சனைகள் தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

மேயர் தேர்வில் பெண் கவுன்சிலர்களின் அதிருப்தி மற்றும் கண்ணீர் குறித்த கேள்விக்கு, “இது எல்லாம் ஒரு பேச்சா? மேயர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். கவுன்சிலர்கள் அந்தந்த பகுதிக்கான பணிகளை செய்ய வேண்டும் என்றார்கள். பொதுமக்கள் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்கள்” எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் முத்துசாமி, “கவுன்சிலர்கள் அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை 3 ஆண்டுகளாகியும் ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்ற கேள்விக்கு, “வழக்குப் போட்டுள்ளார்கள்” என்றபடி கே.என். நேரு பதிலளிக்காமல் கிளம்பிச் சென்றார்.

Tags

Next Story