புதிய வகை கொரோனா பரவல்.. கோவை மாவட்ட சுகாதாரத் துறை முக்கிய அறிவிப்பு…
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருவதால் இந்தியாவிலும் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ப்பட்ட பிறகே வெளிநாட்டு பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், புதிய வகை கொரோனா பரவி வருவதால் கோவை மாவட்டத்தில் உள்ள மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை துணை இயக்குநர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இந்தியாவுக்குள் பெரிய அளவில் பரவல் இல்லை. தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
உலக அளவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது மிக அவசியம். புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றன. அதற்கு புத்தாடைகள், பரிசுகள் வாங்குவதற்காக கடைவீதிகளில் பொதுமக்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் கூட்டமான இடங்களுக்குச் செல்வதை முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக போக வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தால் மட்டும் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோன நோய் தொற்று மட்டுமல்லாமல் சுவாசம் தொடர்பான நோய் தொற்றுகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஒவ்வொருவரும் கொரோனா நோய் தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் தொற்று பாதிப்பு நமக்கு வராமலும், நம்மால் பிறருக்கு பரவுவதையும் கட்டுப்படுத்த முடியும்.
மேலும், காய்ச்சல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது என சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu