ஜிபே மூலம் பணம் அனுப்பிருந்தால் நடவடிக்கை: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தனது வாக்கினை செலுத்தினார்.
கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தன்னுடைய வாக்கை செலுத்தினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் நடக்கும் அனைத்து இடங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தக்கூடிய காட்சிகளை பார்க்க முடிகிறது. மக்கள் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும். நூறு சதவீத வாக்குப்பதிவு என்ற உச்சத்தை அடைய நாம் வாக்களிக்க வேண்டும். வெயில் அதிகம் என்பதால் அதற்கான ஏற்பாடுகளும் ஏற்படுத்தி உள்ளோம். அமைதியான முறையில் தேர்தல் நடப்பதற்கான அனைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் இயந்திரங்கள் கோளாறு ஏற்படுகிறது. அதனை சரி செய்யும் அளவிற்கு இருப்பு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஓட்டு போட முடியாது. பெயர் இருப்பவர்கள் ஓட்டர் ஐடி, பூத் சில்ப் இல்லாவிட்டால் தேர்தல் ஆணையம் மேற்கோள் காட்டியுள்ள ஆவணங்களை காண்பித்து வாக்கு செலுத்திக் கொள்ளலாம். சமூக வலைத்தளத்தை கண்காணிக்க தனிக் குழு அமைக்கப்பட்டு தேர்தல் சம்பந்தப்பட்ட குற்றங்களை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது சம்பந்தமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ஜிபே போன்ற முறையில் வாக்காளர்களுக்கு பணம் அனுப்புவதாக புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் சம்பந்தப்பட்ட வங்கியில் பண பரிவர்த்தனை குறித்தான தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. பெரிய தொகை மட்டும் இன்றி, சிறிய தொகை அதிகளவில் பகிரப்பட்டு இருந்தால், அது தொடர்பான தகவல்களும் குறிப்பிட்ட கணக்கிலிருந்து பலருக்கு தொகை பகிரப்பட்ட நபர்கள் குறித்த தகவல் கேட்டுள்ளோம். வங்கியில் கொடுக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu