கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தடை
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி.
கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை, பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் விட்டு விட்டு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை துவங்கியது முதல், வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதேபோல பல்வேறு குளங்கள் நிரம்பி உள்ளன. நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியான வால்பாறை, ஆனைமலை, மேட்டுப்பாளையம், பேரூர் மற்றும் மதுக்கரை ஆகிய வட்டங்களை சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளான சின்னக்கல்லாறு, ஆழியாறு, சோலையாறு, கூலாங்கல்லாறு, அப்பர்நீரார், கீழ்நீரார், காடாம்பாறை, குரங்கு நீர்வீழ்ச்சி, கோவை குற்றாலம், பில்லூர், மற்றும் கீழ் பவானி ஆகிய இடங்களில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவு, நீரில் மூழ்குதல் போன்ற எதிர்பாரா நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு பருவமழை காலங்களில் இப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu