வேகமெடுக்கும் கோவை 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள்
கோவை மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் நடக்கும் இப்பணிகள், அ.தி.மு.க., ஆட்சியின்போது துவங்கி, பல பணிகள் அப்போதே முடிந்து விட்டன.
ரேஸ்கோர்ஸ் மாதிரிச்சாலை, உக்கடம் பெரிய குளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம், கிருஷ்ணாம்பதி உள்ளிட்ட பல்வேறு குளங்கள் மேம்பாடு, 'பயோ மைனிங்' உள்ளிட்ட பல பணிகள் இன்னும் முடிவடைய வில்லை. கடந்த, 2018ல் துவங்கப்பட்ட இப்பணிகளுக்கான அவகாசம் விரைவில் முடியவுள்ளது.
இந்த பணிகளை 2023 ஜூன் இறுதிக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் மாநகராட்சி உள்ளதால், ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, பணிகளை விரைவுபடுத்த, ஒப்பந்த நிறுவனத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக சில பணிகள் வேகமாக நடந்தாலும், சில பணிகள் அவசர கதியில் நடக்கின்றன.
ரேஸ்கோர்ஸ் பகுதியில், அவசர அவசரமாக இரண்டே நாட்களில் ரோடு சீரமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக போக்குவரத்து மாற்றப்பட்டது. பல ஆண்டுகளாக மோசமாக இருந்த ரேஸ்கோர்ஸ் ரோடுகள், இப்போது பளபளப்பாக மின்னுவதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆங்காங்கே மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
அதேநேரம், பாதாள சாக்கடை குழாய் பதிக்கவோ, குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கவோ மீண்டும் ரோட்டை தோண்டும் வேலையை மாநகராட்சி தோண்டக்கூடாது என்பது மக்களின் எதிர்பார்ப்பு
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், முக்கியப் பணியாக குளங்கள் மேம்பாடு உள்ளது. உக்கடம் பெரியகுளத்தின் கரையில், கடந்த ஆட்சியின்போதே, 1.3 கி.மீ., துாரத்துக்கு 'ஐலவ் கோவை' அமைப்பு உள்ளிட்ட பணிகள், ரூ.39 கோடி மதிப்பில் 'குயிக் வின்ஸ்' முறையில் முடிக்கப்பட்டன. மீதமுள்ள, 4.3 கி.மீ., துாரமுள்ள கரைப்பகுதியில், ரூ.62 கோடியே, 17 லட்சம் மதிப்பில் பணிகள் நடக்கின்றன.
சைக்கிள் டிராக், பேர்டு வாச்சிங் டவர், படித்துறை, மோனோ கிராம், கற்பித்தல் மையம் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. வருவாய்க்காக எட்டு கடைகள் கொண்ட 'கிராப்ட் பஜார்', நிகழ்ச்சி நடத்தும் அரங்கு மற்றும் 'பார்க்கிங்' போன்றவை மேற்குக்கரையில் அமைக்கப்படுகின்றன. இப்பணிகள், ஜனவரி இறுதிக்குள் முடியுமென்று, மாநகராட்சி பொறியாளர்கள் கூறுகின்றனர்.
சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டிருந்தாலும், அதை முழுமையாக செயல்படுத்தி, இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. அதனால், சுற்றுப்பகுதியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் இன்னமும் குளத்தில் நேரடியாக கலக்கிறது.
வாலாங்குளத்தில், ரூ.67 கோடியே, 86 லட்சம் மதிப்பிலான பல்வேறு பணிகள், 75 சதவீதம் முடிந்துள்ளன. வரும் ஜனவரி இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த குளத்திலும் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி இன்னும் முடியாததால், அரசு மருத்துவமனையிலிருருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் குளத்தில் கலக்கிறது.
குறிச்சி குளத்தில் ரூ.52 கோடியே, 16 லட்சம் மதிப்பில் நடக்கும் பணிகளை வரும் மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும். மற்ற குளங்களை ஒப்பிடுகையில், இங்கு பணிகள் மிகவும் மெதுவாகவே நடக்கிறது. மத்திய அரசு கெடு விதித்த பின், சில வாரங்களாக வேகமெடுத்துள்ளன. சைக்கிள் டிராக், 20 அடி உயர திருவள்ளுவர் சிலை, அலுமினியத்திலான ஜல்லிக்கட்டு சிலை, மெகா தலையாட்டி பொம்மை, ஒயிலாட்டம் சிலை, சிறு குளத்தைச்சுற்றிலும் நடைபாதை என பல்வேறு வித்தியாசமான அம்சங்கள் இடம் பெற உள்ளன.
இரட்டை குளங்களாக அமைந்துள்ள செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளம் (முத்தண்ணன் குளம்) ஆகியவற்றில், ரூ.31 கோடியே, 65 லட்சம் மதிப்பில் சைக்கிள் டிராக், ஜாக்கிங் டிராக், குழந்தைகள் பூங்கா, ஜிம் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. இதில், 85 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. இதேபோல், ரூ.19 கோடியே, 36 லட்சம் மதிப்பில், கிருஷ்ணாம்பதி குளத்தில் நடக்கும் பணிகளும், இம்மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். இங்கு பணிகள் மந்தமாக நடப்பதால், முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது.
பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட செல்வ சிந்தாமணி குளத்தை இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமலேயே மாநகராட்சி இருக்கிறது. குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்பது முக்கியம்தான், அதைவிட முக்கியம் அதனை தரமாக முடிக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu