கோவையில் தமிழ் புதல்வன் திட்டத்தை துவக்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்

கோவையில் தமிழ் புதல்வன் திட்டத்தை துவக்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்
X

முதலமைச்சர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படவுள்ளது

கோவையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை விமானம் மூலம் கோவைக்கு வருகை தர உள்ளார். நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் அவருக்கு கோவை விமான நிலையத்தில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

அப்போது தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் மூலம் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படவுள்ளது. இதன் காரணமாக இலட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைய உள்ளனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெற உள்ள அரசு கலை கல்லூரி வளாகத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

பின்னர் கணியூர் செல்லும் அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி சிலையை திறந்து வைக்க உள்ளார். முதலமைச்சரின் கோவை வருகையை முன்னிட்டு கோவையில் ட்ரோன் பறக்க காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் நகரப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil