அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிட்டால் ஒரு இலட்சம் பரிசு ; உணவகத்தில் குவிந்த மக்கள்..!
பிரியாணி சாப்பிடும் போட்டி
கோவை ரயில் நிலையத்திற்கு அருகே கேரள மாநிலத்தைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளரும், தொழிலதிபருமான பாபி குத்தகைக்கு எடுத்து ஹோட்டல் தொடங்கியுள்ளார். இந்த கடையின் துவக்க நாளான இன்று அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்றும், நான்கு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு என்றும், மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
உணவகத்தை உரிமையாளர் பாபி செம்மனூர் போட்டியை தொடங்கி வைத்தார். முதல் சுற்றில் 25 பேர் கலந்து கொண்டனர். மேலும் போட்டியில் 400 க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்தப் போட்டியில் அதிக அளவில் பிரியாணி வைக்கப்பட்டதால் பலர் சாப்பிட முடியாமல் திணறினர். இருப்பினும் ஒரு சிலர் இரண்டாவது பிரியாணி முடித்துவிட்டு மூன்றாவது பிரியாணிக்கு சென்றனர்.
அப்போது சாப்பிட முடியாமல் சிலர் வாந்தி எடுத்ததால் போட்டியிலிருந்து விலக்கப்பட்டனர். மேலும் உணவகத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. மேலும் சாலையோரம் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. வாகன போக்குவரத்து மிகுந்த ரயில் நிலையப் பகுதியில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டதாலும், நோ பார்கிங்க் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.
போட்டி குறித்து உணவகத்தின் உரிமையாளர் பாபிச்செம்மனூர் அளித்த பேட்டியில், ”பிரியாணி போட்டியானது ஜாலிக்காக நடத்தி உள்ளோம். போட்டியில் பங்கு பெற்றவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய திறமைக்கேற்றவாறு பரிசும் வழங்கப்படும். போட்டியில் அறிவிக்கப்பட்ட பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். வயநாட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 100 வீடுகளை கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அரசுடன் ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu