கோவை புத்தகத் திருவிழா வருகின்ற 19 ம் தேதி துவக்கம்..!
ஆட்சியர் கிராந்திகுமார் பாடி
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா நிர்வாகம் இணைந்து ஆண்டுதோறும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக எட்டாவது ஆண்டாக நடத்துகின்ற கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா ஜூலை 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு புதுச்சேரி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். 280க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
இந்நிலையில் இந்த புத்தக கண்காட்சி குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, ஆண்டுதோறும் இந்த புத்தக திருவிழா வெற்றிகரமாக நடந்து வருவதாகவும், அதே போல் இந்த ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகள், விருதுகள், போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மாவட்ட நூலகத் துறை மற்றும் கொடிசியா நிர்வாகம் இணைந்து புத்தக திருவிழாவை நடத்த உள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு 2 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றதாகவும், அதே போன்று இந்த ஆண்டும் எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார். கடந்த முறை புத்தகங்கள் நன்கொடை மூலம் 2000 புத்தகங்கள் சிறைவாசிகளுக்காக அளிக்கப்பட்டது. அதே போன்று இந்த ஆண்டும் புத்தக நன்கொடை நடத்த உள்ளதாக தெரிவித்தார். பள்ளி மாணவர்களை அந்தந்த பள்ளிகளில் இருந்து அழைத்து வரவும் திட்டமிட்டு கொண்டிருப்பதாக கூறினார். 285 அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும், பல்வேறு மாநிலங்களில் இருந்து பதிப்பாளர்கள் வருகை புரிய உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்த புத்தகத் திருவிழாவில் அனைத்து வயதினர்களுக்கான புத்தகங்களும் இடம்பெற உள்ளதாக தெரிவித்தார். மேலும் இம்முறை மாணவர்களுக்கு பல்வேறு இலக்கிய போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை எந்த நாட்களிலும் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து இந்த புத்தகத் திருவிழா நடைபெறும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் இதில் பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த புத்தக திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் எனவும், மாணவர்களும், பொதுமக்களும் அதிக அளவில் புத்தகத் திருவிழாவிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu