வாட்ஸ் அப் மூலம் பொய் பரப்புவது திமுக தான் : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்எல்ஏ வானதி சீனிவாசன்.
Bjp MLA Accusation To DMK
கோவை ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியில் வாட்டர் ஏடிஎம் செயல்பாட்டை கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”இதுவரை கோவை தெற்கு தொகுதியில் 9 வாட்டர் எடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் மக்களுக்கு 40 ரூபாய் மிச்சப்படுத்தி இருக்கின்றோம். தமிழக முதல்வர் மாநில அரசு நிகழ்வில் அரசு திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். காணொளி காட்சி மூலம் கோவை அரசு மருத்துவமனை கட்டிட்டம் திறக்கப்பட்ட விழாவில் நான் பங்கேற்றேன்.
பொள்ளாச்சியில் இன்று நடந்தது அரசு நிகழ்ச்சியாக இல்லை. அரசு நிகழ்வு என்பதால் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கலந்து கொண்டோம். அரசு நிகழ்வு மேடையை அரசியல் மேடையாக முதல்வர் மாற்றி இருக்கின்றார். பிரதமர் பற்றி அரசு மேடையில் முதல்வர் பேசி இருப்பது அரசியல் நாகரிகத்திற்கு அப்பாற்பட்டது. பிரதமர் ஆயிரக்கணக்கான திட்டங்களை துவக்கி வைக்கும் போது, பக்கத்தில் இருந்தவர் முதல்வர். பிரதமர் எத்தனை முறை வந்து இருக்கின்றார்.
அப்போது எல்லாம் உங்கள் காதுகளை மூடிக்கொண்டு இருந்தீர்களா?இன்று பொள்ளாச்சி அரசு விழாவில் முதல்வர் பட்டியல் போட்ட உக்கடம் பாலம், அவினாசி பாலம், பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற பணிகள் எந்த ஆட்சியில் துவங்கியது? தேங்காய் எண்ணெய் ரேசன் கடையில் விற்பனை தொடர்பான அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். அது செய்யப்படவில்லை. தென்னை வேர்வாடல் நோய்க்காக மரத்தை வெட்ட பணம் கொடுக்கிறார்கள். தேங்காய் விற்பனைக்கு மின்னணு வேளாண் சந்தையை உருவாக்குவதாக சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் ஈ நாம் திட்டம் என்பது மத்திய அரசு கொண்டு வந்த திட்டம்.
வாட்ஸ் அப் யூனிவர்சிட்டி மூலம் பொய் பரப்புவது எல்லாம் திமுகவிற்கு சொந்தமானது. 1967 ல் இருந்தே திமுக பொய் பேசி வருகின்றது. எத்தனை படி அரிசி தருவேன் என கூறி எத்தனை படி அரிசி கொடுத்தீர்கள்? சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை தடுத்தது யார்? பிரதமர் மோடி ஒவ்வொரு முறை வரும் போதும், கிலி ஏற்படுவது திமுகவிற்குதான். தமிழ் மொழியை உலகம் முழுவதும் எடுத்து செல்பவர் மோடி என. உங்களுடைய பொய்களை இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள்.
இனிமேலாவது அரசு மேடையை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம். 6 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் மத்திய அரசால் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை எத்தனை முறை சொல்வது? அங்கன்வாடி கட்டிடம், பாலம் போன்றவை கட்டி கொடுக்கப்படும் என இதையெல்லாம் முதல்வர் அறிவிக்க வேண்டியதா? சிஏஏ சட்டம் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரானது அல்ல. சிஏஏ சட்டத்தின் உண்மை நிலையை மக்களிடம் விளக்குகின்றோம். சிஏஏ சட்டத்தை நிறைவேற்ற மாட்டேன் என்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu